Coimbatore DMK: கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் பண பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர், போலீஸார் உள்ளிட்டோர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லை.
அடுத்து கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் வைத்து வெளி மாவட்ட நபர் ஒருவர் பணப்பட்டுவாடா செய்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வாலிபர் ஒருவர் கையில் பணத்துடன் பூத் ஸ்லிப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான சம்பத் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்குமாறு கூறியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த பாஜகவினர் அந்த நபரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். அவரது பெயர் மனோஜ் வயது 23 என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 42,500 ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.