தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தான் பொதுவாக வெப்ப நிலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயில் வாட்டி வறுத்தெடுத்து வருகிறது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் நிலவி வருகிறது. மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.
ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.